Breaking News
Loading...



Ajith Kumar's Arrambam was one of the biggest hits of 2013. After the success of this movie, the Thala is returning with Veeram which has hit the screens today (January 10).


நடிகர் : அஜீத் குமார்
நடிகை :தமன்னா
இயக்குனர் :சிவா
இசை :தேவிஸ்ரீபிரசாத்
ஓளிப்பதிவு :வெற்றி
மதுரையில் காய்கறி கடை வைத்திருக்கிறார் அஜீத். இவருக்கு நான்கு தம்பிகள். குடும்பத்தின் ஒற்றுமைக்காகவும் தனது தம்பிகளுக்காகவும் திருமணம் செய்துகொள்ளாமலேயே வாழ்ந்து வருகிறார். இவருடைய குடும்ப வக்கீலாக வருகிறார் சந்தானம். அஜீத்தின் வீட்டில் வேலையாளாக வருகிறார் அப்புக்குட்டி. இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் ஒரு குடும்பமாக வாழ்ந்து வருகிறார்கள். 

அதே ஊரில் ரவுடித்தனம் செய்து வரும் வில்லன் பிரதாப் ராவத் மார்கெட்டில் இருக்கும் வியாபாரிகளை ரொம்பவும் கொடுமைப்படுத்துகிறார். அவர்களுக்கு நன்மை செய்யும் விதமாக மார்க்கெட்டில் வரும் பெரும்பாலான டெண்டர்களை அஜீத்தே வளைத்துப் போகிறார். இதனால், அஜீத் மீது வில்லனுக்கு பகை உண்டாகிறது. அவரை பலி வாங்க வில்லன் தருணம் பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார். 

அஜீத்துக்கு காதல் என்றாலே பிடிக்காது. அவருடைய குடும்ப வக்கீலான சந்தானமும் இவருக்காக தன் காதலையும் துறக்கிறார். இந்நிலையில், அஜீத்தின் தம்பிகள் தன்னுடைய அண்ணனுக்கு தெரியாமலேயே காதலித்து வருகின்றனர். இவர்களுடைய காதல் சந்தானத்துக்கு தெரிய வருகிறது. அவர்கள் நீண்ட நாட்களாக காதலித்து வருவதாக சந்தானத்திடம் கூறும்போது, அவர்களுடைய காதலை சேர்த்து வைப்பதாக சந்தானம் உறுதி கூறுகிறார். 

தனது அண்ணன் அஜீத்தை காதலிக்க வைத்துவிட்டால் நம்முடைய காதலுக்கு அஜீத் பச்சைக்கொடி காட்டி விடுவார் என்ற எண்ணத்தில் அவரை எப்படி காதல் செய்ய வைக்கலாம் என யோசிக்கிறார்கள். அதற்கு அஜீத்தின் பால்ய நண்பரான ரமேஷ் கண்ணாவிடம் சென்று யோசனை கேட்கிறார்கள். ரமேஷ் கண்ணா அதே ஊரில் கலெக்டராக இருக்கிறார். அவர், அஜீத் சிறு வயதில் காதல் செய்ததாகவும், அஜீத் தன்னுடைய குடும்ப ஒற்றுமைக்காக அந்த காதலை உதறி தள்ளிவிட்டதாகவும் கூறுகிறார். 

அந்த பெண் இப்பொழுது வேறு ஒருவனை திருமணம் செய்து கொண்டுவிட்டதாகவும் கூறுகிறார். என்றாலும், அஜீத்துக்கு அந்த பெண்ணின் பெயரான கோப்பெருந்தேவி ரொம்பவே பிடிக்கும். அந்த பெயருடைய பெண்ணை அஜீத்துக்கு அறிமுகம் செய்து வைத்தால் காதல் வர வாய்ப்புள்ளது என யோசனை கூறுகிறார். இதற்காக ஒரு தொல்பொருள் துறையில் வேலை செய்யும் தமன்னாவை ஒரு கோயிலில் சந்தானம் மற்றும் அவனது தம்பிகள் பார்க்கிறார்கள். அவளது பெயர் கோப்பெருந்தேவி என்பதை அறியும் அவர்கள், அவளை எப்படியாவது தங்களது வீட்டுக்கு அருகில் தங்க வைத்தால் அஜீத்தை காதல் செய்ய வைத்துவிட்டலாம் என எண்ணுகின்றனர். 

இதனால் ரமேஷ் கண்ணாவின் உதவியுடன் அவளை இவர்களுடைய ஊருக்கு மாற்றம் செய்கின்றனர். அவளும் அஜீத்தின் வீட்டுக்கு அருகிலேயே தங்குகிறார். அடிக்கடி சந்திக்கும் அஜீத்-தமன்னா இருவருக்குள்ளும் நாளடைவில் காதல் வர ஆரம்பிக்கிறது. 

இந்நிலையில் தன்னுடைய அப்பாவிடம் சொல்லி அஜீத்தை திருமணம் செய்துகொள்வதற்காக தமன்னா, அஜீத் மற்றும் அவரது தம்பிகளை அழைத்துக் கொண்டு அவரது ஊருக்கு ரெயிலில் பயணமாகிறார். அப்போது, அங்கு வரும் ஒரு ரவுடிக்கும்பல் அஜீத்தை மற்றும் அவரது தம்பிகளை தாக்குகிறது. அந்த ரவுடிக்கும்பலை அஜீத் தனியொரு ஆளாக நின்று அடித்து துவம்சம் செய்கிறார். அதுவரை சாதுவாக இருந்த அஜீத், திடீரென விஸ்வரூபம் எடுத்தது அவரது தம்பிகள், தமன்னா உள்ளிட்ட எல்லோரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது. 

இறுதியில் அஜீத்தை தாக்க வரும் அடியாள் தவறுதலாக தமன்னாவை தாக்கிவிட, தமன்னா மயக்கமடைகிறார். அவரை ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்க்கிறார் அஜீத். ஆஸ்பத்திரியில் நினைவு திரும்பும் தமன்னா அஜீத்திடம் சொல்லிக்கொள்ளாமல் தனது ஊருக்கு பயணமாகிறாள். இறுதியில் அஜீத் தன்னை கொலை செய்ய ஆள் அனுப்பியவர் யார் என்பதை கண்டறிந்தாரா? பிரிந்து சென்ற தனது காதலி தமன்னாவுடன் ஒன்று சேர்ந்தாரா? என்பதே மீதிக்கதை. 

அஜீத் நரைத்த தலைமுடி, சற்றே வளர்ந்த தாடி, வெள்ளை வேஷ்டி, சட்டை என ஒரு கிராமத்து ஆளாக அப்படியே இருக்கிறார். ரொம்ப நாளைக்கு பிறகு கிராமத்து பின்னணியில் நடிக்கும் அஜீத்தின் நடிப்புக்கு தீனி போடும் கதாபாத்திரம் இவருடையது. அந்த வாய்ப்பை மிகச்சரியாக பயன்படுத்தி நடிப்பில் மிளிர்கிறார் அஜீத். இவர் கெட்டப்புக்கு கிடைக்கும் வரவேற்பைவிட, இவருடைய வசனங்கள் தியேட்டரில் கைதட்டல்களை அள்ளிச் செல்கிறது. 

குறிப்பாக ‘என்ன நான் சொல்றது’, ‘சந்தோஷம்னா மத்தவங்ககிட்ட பகிர்ந்துக்கணும், துக்கம்னா நம்மகிட்டவே வச்சிக்கணும்’ என்று இவர் பேசும் வசனங்கள் நான் ஸ்டாப் கைதட்டல்களை வாங்கிச் செல்கிறது. படத்தில் அஜீத் நடந்து வரும் ஸ்டைல், டெண்டர் எடுக்க வரும்போது குடைக்குள் இருந்து வெளியே வரும்போது இவர் மேல் விழும் மழைத்துளி காட்சி என பெரும்பாலான காட்சிகள் ரசிகர்களை துள்ளி குதித்து ஆட்டம் போட வைக்கிறது. 

சண்டைக் காட்சிகளிலும் சபாஷ் போட வைக்கிறார். தமன்னாவுக்கும் அஜீத்துக்கு நிகரான கதாபாத்திரம்தான். இவரை மையமாக வைத்துதான் கதையே நகர்கிறது என்பதால் வலுவான கதாபாத்திரம் இவருடையது. நடிப்பிலும் அந்த கதாபாத்திரத்தின் தன்மை அறிந்து சிறப்பாக நடித்திருக்கிறார்.

சந்தானம் முதல் பாதிவரை காமெடியுடன் கதையை நகர்த்திச் செல்ல துணை புரிந்திருக்கிறார். பிற்பாதியில், இவருடன் தம்பி ராமையா இணைந்துவிடுகிறார். இவர்கள் சேர்ந்து அடிக்கும் லூட்டி படத்தை விறுவிறுப்பாகவும், கலகலப்பாகவும் நகர்த்தி செல்ல உதவியிருக்கிறது. 

விதார்த், பாலா, சுகைல், முனீஷ் ஆகியோர் அஜீத்தின் தம்பிகளாக வருகிறார்கள். அண்ணனை விட்டுக் கொடுக்காத தம்பிகளாக எல்லோருமே நடிப்பில் அசத்தியிருக்கிறார்கள். அமைதியை விரும்பும் அப்பாவாக வரும் நாசரும் அழகான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அப்புக்குட்டி, ரமேஷ் கண்ணா, ‘நாடோடிகள்’ அபிநயா ஆகியோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். பிற்பாதியில் வில்லனாக அவதாரம் எடுக்கும் அதுல் குல்கர்னியும் வில்லத்தனத்தில் மிரட்டுகிறார். படம் முழுவதும் கலகலப்பாகவும், விறுவிறுப்பாகவும் திரைக்கதை அமைப்பதில் வல்லவர் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார் இயக்குனர் சிவா. 

யாருக்கும் சாதாரண கதாபாத்திரம் என்று இல்லாமல், படத்தில் நடித்த அனைவருக்குமே வலுவான கதாபாத்திரம் அமைத்து கதையை நகர்த்திய இயக்குனருக்கு மீண்டும் ஒரு சபாஷ் போடலாம். தேவி ஸ்ரீபிரசாத் இசையில் அனைத்து பாடல்களும் ஆட்டம் போட வைக்கின்றன. அஜீத்தின் அறிமுகப் பாடல் ரசிகர்களுக்கு உற்சாகமூட்டும் என்பது மட்டும் நிச்சயம். 

மொத்தத்தில் ‘வீரம்’ மாவீரம்.

0 comments:

Post a Comment

Popular Posts